தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் எஸ். போல் கபூர் (S. Paul Kapur) உடனான கலந்துரையாடலின் போது, நடுநிலைமையைப் பேணுவதற்கும் சர்வதேச சட்டங்களை கண்டிப்பாகப் பின்பற்றுவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான துறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றங்களுக்கு மத்தியில், எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்கா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு அமைச்சர் ஹேரத் தனது நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், இலங்கை கடற்படை மற்றும் விமானப்படைக்கு அமெரிக்க அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட கடல்சார் கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கும் அவர் நன்றி கூறினார்.
இலங்கையின் மேம்பட்டு வரும் முதலீட்டுச் சூழலை சுட்டிக்காட்டிய அமைச்சர், நாட்டில் பாதுகாப்பான மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டதுடன், அமெரிக்க வணிகர்களை இலங்கையிலுள்ள முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு அழைப்பு விடுத்தார். முதலீட்டாளர்களுக்குத் தேவையான ஆதரவையும் வசதிகளையும் வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
இதற்குப் பதிலளித்த போல் கபூர், அமெரிக்கா இலங்கையுடனான தனது உறவை உயர்வாக மதிப்பதாகக் குறிப்பிட்டதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அமைச்சர் விஜித ஹேரத் அதன் வெற்றிக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, அமெரிக்காவிற்கும் அதன் பிரஜைகளுக்கும் அவர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்