இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கொழும்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இக்கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது எனக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்த ராஜ்நாத் சிங், ஜனாதிபதி திசாநாயக்கவின் அரசாங்கம் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ததற்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
“நாகரிக இரட்டையர்கள், நெருங்கிய அண்டை நாடுகள் மற்றும் சமுத்திரப் பங்காளிகள்” என்ற வகையில், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மக்களின் நலனுக்காகவும் இணைந்து பணியாற்ற இந்தியாவும் இலங்கையும் உறுதியுடன் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
பிராந்தியம் முழுவதிலும் உள்ள பாதுகாப்பு, கூட்டிணைந்த பாதுகாப்பு, அமைதி மற்றும் செழிப்பு தொடர்பான விடயங்களில் ஒத்துழைப்பதற்கான தங்களது உறுதியான நிலைப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தியதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று இலங்கை வந்தடைந்த நிலையில், செப்டம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கும் தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடங்கியுள்ளார்.