சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கிய வேண்டுகோளையும் விடுத்தார்.
சட்டப்பேரவை உரையின் முக்கிய அம்சங்கள்:
-
கைத்தறி மற்றும் கதர் ஆடைகள்: நெசவாளர்களின் தொழிலை ஊக்குவித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வாரம் அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது கைத்தறி அல்லது கதர் ஆடைகளை அணிய வேண்டும் என அமைச்சர் அன்போடு கேட்டுக்கொண்டார்.
-
அரசுத் துறை கொள்முதல்: அரசுத் துறைகளுக்குத் தேவையான சீருடைகள் மற்றும் துணிகளை கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களிடமிருந்தே முழுமையாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
-
பொங்கல் பரிசுத் திட்டம்: பொங்கல் பண்டிகையின்போது பெண்கள் விரும்பி அணியும் ஜரிகைப் பட்டுப்புடவை மற்றும் சலவை செய்யப்பட்ட வேஷ்டி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 612 கோடி ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ. 312 கோடி விடுவிக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், 2028 பொங்கல் திட்டத்திற்குத் தேவையான நூல்கள் அனைத்தும் அரசு கூட்டுறவு ஆலைகள் மூலமாகவே முழுமையாக உற்பத்தி செய்யப்படும்.
-
நவீனமயமாக்கல் & புதிய திட்டங்கள்: இயங்கி வரும் 6 கூட்டுறவு நூற்பாலைகளை நவீனமயமாக்க ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இளைஞர்களிடம் கைத்தறியைக் கொண்டு சேர்க்கும் விதமாக ‘வெற்றி தறி நூல் திட்டம்’ முதற்கட்டமாகச் சென்னை தி.நகரிலும், பின்னர் கோவையிலும் விரிவுபடுத்தப்படும். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை நவீன சந்தைக்கு ஏற்ப மாற்றி, இணையவழி விற்பனை ஊக்குவிக்கப்படும்.
-
பனைப் பொருள் ஏற்றுமதி: பனங்கருப்பட்டி, பதநீர் மற்றும் பனைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், விவசாயிகள் மற்றும் பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ரூ. 12 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத ஊழியர்களுக்கு விரைவில் அவை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.
-
முதல்வர் விஜய் குறித்த நெகிழ்ச்சி: உரையின் இடையே குறிப்பிட்ட அமைச்சர், “இந்தச் சட்டமன்றத்திற்குள் பார்வையாளராகக் கூட வரமாட்டேனா என ஏங்கிய எனக்கு, இன்று அமைச்சராகச் சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. முதலமைச்சரின் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்ட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை; ஆனால், இன்று பேரவையில் அவரது பின் இருக்கையில் அமர்ந்து, அவர் திரையில் தெரியும்போதெல்லாம் நானும் கேமராவில் தவறாமல் வந்துவிடுகிறேன். இந்த அதிர்ஷ்டமான வாய்ப்பைத் தந்த முதல்வருக்கு நன்றி” எனத் தெரிவித்தார்.
Hashtags:
#HandloomApparel #VijayBalaji #TNAssembly #CoOptex #WeaversWelfare #TVKGovt #TNPolitics #TamilNaduNews #ChennaiNews #TamilNews #BreakingNewsTamil #TrendingNewsTamil