BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு நேற்று பெருந்திரளான மக்களின் ஆதரவுடன் கனடா ALBERT CAMPBELL SQUARE இல் நடைபெற்றது.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், நீதிக்காகக் காத்திருக்கும் குடும்பங்களின் குரலாகவும் ஒன்றிணைந்து நடாத்தப்பட்ட செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ – ‘விழித்தெழு தமிழா!’ மிகுந்த காத்திரமாக நடைபெற்றது.
எம்மினத்துக்காகக் குரல்கொடுப்பதற்கு கனேடிய மண் மேடை கொடுத்தமைக்கு நன்றி கூறியபடி ஆரம்பமாகிய நிகழ்வில்
செம்மணி என்பது வெறும் மண்ணல்ல… பல குடும்பங்களின் வலியான வரலாறு!
காணாமற் போன எம் உறவுகள் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எம்மினத்தின் ஆறாத வலிகள், தேடல்கள், காத்திருப்புக்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மௌனித்த வார்த்தைகள்… என எல்லாவற்றுக்கும் சர்வதேச நீதிமன்றத்தின் ஊடாகப் பதிலைப் பெற்றுத் தரவே இன்று நாங்கள் கூடியுள்ளோம் என்ற செய்தி மற்றும் ‘அன்னைத் தமிழீழ மண்ணே” என்ற தாயகப்பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.
BEHIND ME MEDIA தற்போது நடாத்திக் கொண்டிருக்கும் நீதிக்கான போராட்டத்தின் அடையாளச் சின்னமாகவுள்ள செம்மணி மனிதப் புதைகுழிக்கு பதிலைக் கேட்கும் அணியில் நாங்களும் இணைந்து கொள்கின்றோம் என்பதோடு தமிழர் நலன் குறித்த சகலரும் ஓரணியாகத் திரள வேண்டும் எனவும் நிகழ்வில் உரையாற்றிய பிரமுகர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ரொறண்டோ மேயர் பதவி வேட்பாளரும் நீண்ட கால கனேடிய அரசியல் பிரமுகருமான பிராட் பிராட்பேர்ட் மற்றும் கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஷல்மா ஜாஹித் ஆகியோர் வருகை நிகழ்வுக்கு வலுச் சேர்த்திருந்தது. அவர்கள் தமது உரைகளில் கனேடிய தமிழர்களால் தமது இனத்துக்கு நீதி கேட்டு நடாத்தப்படும் மேற்படி போராட்டத்திற்கு பக்க பலமாகவும் உறுதுணையாகவும் தானும் தனது கட்சியும் தொடர்ச்சியாக பயணிப்போம் என்றும். சர்வதேச நீதியைப் பெறுவதில் எமது பங்கும் பெரிதாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்கள்.
உலகளாவிய ரீதியிலான ஆதரவுக் குரல்களோடு நடைபெற்ற மேற்படி விழித்தெழு தமிழா! நிகழ்வில் செம்மணி மனிதப் புதைகுழிப் பேரவலமே எம்மினத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசினால் நடாத்தப்பட்ட இனப்படுகொலைக்கான சாட்சியாக உள்ளதை நாம் மறக்கக் கூடாது என்றும் நிகழ்வில் உரையாற்றியவர்கள் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
செம்மணியில் இலங்கை இராணுவத்தால் வயது பேதமின்றி எமது மக்கள் மீது நடாத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை மீளவும் கண்முன்னே கொண்டு வந்த நாடகமானது தமிழினப் படுகொலைக்கு மேலதிகமாக எந்த வித வார்த்தைகளும் மொழியும் தேவையில்லை எனும் அளவுக்கு யதார்த்தமாக அமைந்திருந்தது. ஒவ்வொருவரும் தான் வகித்த கதாபாத்திரத்தின் வலிகளை மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
BEHIND ME MEDIA வின் நிறுவனரும் தலைவருமான கணா செல்வா தனது ஏற்புரையில்
ஒரு ஊடகம் எதற்காக செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரிய ஒரு நிகழ்வை இரண்டாவது ஆண்டாகவும் நடாத்துகின்றது என்பது குறித்தும் மிகுந்த குரூரமாக கொலை செய்யப்பட்டு செம்மணி மனிதப்புதை குழியின் ஊடாக எலும்புகளாக தோண்டி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது உறவுகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனதும் தார்மீகப் பொறுப்பு என்பது குறித்தும் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார்.
அத்துடன் ஒரு சில அமைப்புகளைத் தவிர ஏனைய கனேடிய தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களை பல்வேறு விதமாக வழிகளில் அழைத்தும் அவர்கள் வரவில்லை. 2009ஆம் ஆண்டுக்குப் பின் எம்மினத்தின் அடையாளங்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டவர்கள் எங்கே போனார்கள்? ஆனால் ஒரு ஊடகமான நாம் நடாத்திக் கொண்டிருக்கின்ற நீதிக்கான போராட்டத்தில் பல ஊடகங்கள் இன்று எம்முடன் இணைந்து கொண்டிருக்கின்றார்கள் இது எமது செயற்பாடுகள் சரி என்பதற்கான ஆதாரம் தானே என்றார்.
எமக்குப் பின்னால் எவ்வளவு இளைஞர்கள் இருக்கின்றார்கள். நாம் யாரையும் பலவந்தமாக இங்கே அழைக்கவேயில்லை. என அவர் குறிப்பிட்டுக்கொண்டிருந்த போது நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் ‘தேசியத் தலைவரின் பெயரைச் சொல்லி வாழத் தான் இன்று இங்கே வராதவர்கள் இருக்கின்றார்களே தவிர எமது மக்களுக்காக இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மேற்படி போராட்ட நிகழ்வுக்கு நிதி உதவிகள், அனுசரணைகள் வழங்கியோர் சகலருக்கும் நன்றிகளைத் தெரிவித்த கணா செல்வா அவர்கள், அழித்தொழிக்கப்பட்ட எம்மினத்துக்கு நீதி கேட்கும் இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளாத கனேடிய தமிழ் அரசியல்வாதிகளை நோக்கி நீங்கள் அமைப்புக்களின் பின்னால் தான் நிற்பீர்கள் என்றால் ஏன் எம்மினத்தவரிடம் வாக்குக் கேட்டுச் செல்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
‘செம்மணி மனிதப் பேரவலத்தை’ சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து பன்னாட்டு விசாரணைக்குரிய அழுத்தத்தை கொடுக்க வேண்டியது புலம்பெயர் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பு அதை நாம் சரிவரச் செய்ய வேண்டும் என்று கூறி நிகழ்வில் இணைந்திருந்த சகலருக்கும் நன்றிகளைத் தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.
தாயக எழுச்சிப் பாடல்கள், நடனங்கள், ஆவணத் தொகுப்புக்கள்… பிரமுகர்களின் கருத்துக்கள், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த திட்டங்களோடு செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா! நிகழ்வு நிறைவுபெற்றது.