சென்னை
தமிழகம் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க வடமாநில ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்குத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடமாநில ஆசிரியர்கள் நியமனம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குப்பூர் அரசு மாதிரிப் பள்ளியில், நீட் மற்றும் ஜே.இ.இ. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்க ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 5 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆசிரியர்கள் புறக்கணிப்பா?:
“நீட் தேவையில்லை எனத் தமிழகம் உறுதியாகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, அதற்கான பயிற்சியை வழங்க வெளிமாநிலங்களில் இருந்து ஆசிரியர்களைத் தேடி அழைத்து வருவது ஏன்? கல்வித்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்கள் தமிழகத்தில் ஏராளமாக உள்ள நிலையில், அவர்களை அரசு முதலில் அடையாளம் காணாதது ஏன்?” என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுக்குச் சரமாரி கேள்விகள்:
-
இந்த 5 பேரைத் தேர்ந்தெடுத்தது யார்? எந்த விதிமுறையின் கீழ் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்?
-
இவர்களின் கல்வித் தகுதி மற்றும் கற்பித்தல் அனுபவம் என்ன? இவர்களுக்கான ஊதியத்தை வழங்குவது யார்?
-
இந்த நியமனத்தில் தமிழகத்தில் உள்ள தகுதியானவர்களைப் பரிசீலிக்கும் நடைமுறை மேற்கொள்ளப்பட்டதா?போன்ற விவரங்களை அரசு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையை விளக்கக் கோரிக்கை:
“நீட் வேண்டாம் என்ற தமிழகத்தின் கொள்கை நிலைப்பாட்டிற்கும், நீட் பயிற்சியை முன்னெடுக்கும் இந்த நடைமுறைக்கும் இடையிலான முரண்பாட்டைத் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை மறைக்காமல் முழுமையான விளக்கத்தை அரசு உடனடியாக வெளியிட வேண்டும்,” என்று வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
#Velmurugan #NEET #TNGovernment #SalemNews #TamilNaduNews #TNEducation #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates