சென்னை
திமுகவின் 16-ஆவது உட்கட்சித் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் உள்கட்டமைப்பில் மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவரும் வகையில் 9 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
பவள விழாவைக் கடந்து நூற்றாண்டை நோக்கிப் பயணிக்கும் திமுகவை, அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயார்படுத்தும் வகையில் ‘கழக மறுசீரமைப்புக் குழு’ அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட 9 முக்கியத் தீர்மானங்களின் முழு விவரம்:
-
தீர்மானம் 1 – கிளைக் கழகச் செயலாளர் (வயது வரம்பு 45):கட்சியின் ஆணிவேரான கிளைக் கழகங்களில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க ஏதுவாக, கிளைச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சமாக இருமுறை மட்டுமே கிளைச் செயலாளராகப் பதவி வகிக்க முடியும்.
-
தீர்மானம் 2 – மாநகரங்களில் புதிய கிளைக் கழகம்:மாநகரப் பகுதிகளில் வட்டக் கழகங்களை மேலும் வலுப்படுத்த ‘மாநகர கிளைக் கழகம்’ என்ற புதிய நிர்வாக அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதற்கும் அதிகபட்ச வயது 45 மற்றும் அதிகபட்ச பதவிக்காலம் 2 முறை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முதற்கட்டமாகச் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகராட்சிகளில் அமல்படுத்தப்படும்.
-
தீர்மானம் 3 – வட்டக் கழகச் செயலாளர் (வயது வரம்பு 50):சென்னை மாநகராட்சியில் இனி 10,000 வாக்குகளுக்கும், பிற மாநகரங்களில் 5,000 வாக்குகளுக்கும் ஒரு வட்டக் கழகம் செயல்படும். மாநகர, நகர மற்றும் பேரூர்க் கழகங்களில் உள்ள வட்டக் கழகச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது 50 ஆகவும், பதவிக்காலம் அதிகபட்சம் இரு முறை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
-
தீர்மானம் 4 – பேரூர்க் கழகச் செயலாளர் (வயது வரம்பு 60):பேரூராட்சிகளில் உள்ள பேரூர்க் கழகச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவர்களும் இரு முறை மட்டுமே அப்பொறுப்பில் நீடிக்க முடியும்.
-
தீர்மானம் 5 – பகுதிக் கழகச் செயலாளர் (வயது வரம்பு 60):மாநகரங்களின் அச்சாணியான பகுதிக் கழகங்கள், இனி சென்னையில் 40,000 வாக்காளர்களுக்கும், பிற மாநகரங்களில் 30,000 வாக்காளர்களுக்கும் ஒன்றாக அமைக்கப்படும். இதன் செயலாளர்களுக்கான வயது வரம்பு 60 ஆகவும், பதவிக்காலம் அதிகபட்சம் 2 முறை எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
-
தீர்மானம் 6 – நகரக் கழகச் செயலாளர் (வயது வரம்பு 60):மக்கள் தொகை அடிப்படையில் சராசரியாக 40,000 வாக்காளர்களை உள்ளடக்கி ஒரு நகரக் கழகம் பிரிக்கப்படும். நகரச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 60; அதிகபட்ச பதவிக்காலம் இருமுறை.
-
தீர்மானம் 7 – ஒன்றியக் கழகச் செயலாளர் (வயது வரம்பு 60):மாவட்டக் கழகங்களைத் தாங்கிப் பிடிக்கும் ஒன்றியக் கழகங்கள் இனி 30,000 வாக்காளர்களுக்கு ஒன்றாக உருவாக்கப்படும். எந்த ஊராட்சியும் பிரிக்கப்பட்டு இரு ஒன்றியங்களில் இணையக் கூடாது; ஒவ்வொரு கழக ஒன்றியமும் ஒரே சட்டமன்றத் தொகுதிக்குள் மட்டுமே அமைய வேண்டும். ஒன்றியச் செயலாளருக்கான வயது வரம்பு 60; அதிகபட்ச பதவிக்காலம் இருமுறை.
-
தீர்மானம் 8 – மாவட்டக் கழகங்கள் 110 ஆக உயர்வு (வயது வரம்பு 70):கட்சியின் ரத்தநாளங்களாக விளங்கும் மாவட்டக் கழகங்களின் எண்ணிக்கை தற்போதைய 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தப்படுகிறது. வருவாய் மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, ‘இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரு கழக மாவட்டம்’ எனச் சீரமைக்கப்படுகிறது. மாவட்டச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 70 ஆகவும், அதிகபட்ச பதவிக்காலம் 3 முறை எனவும் அதிரடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்கள் அதிகரிப்பதால், இனி ‘மாநகரச் செயலாளர்’ என்ற பொறுப்பு இருக்காது.
-
தீர்மானம் 9 – 15 நாட்களுக்குள் செயல்படுத்த உத்தரவு:புதிதாக அமையவுள்ள 110 மாவட்டக் கழகங்களை கட்சித் தலைவர் அறிவித்தவுடன், உடனடியாக மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி 15 நாட்களுக்குள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளைக் கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும். அதன் பின் தலைமைப் பிரதிநிதி முன்னிலையில் இறுதிப் பட்டியலுக்கு ஒப்புதல் பெற்றுத் தலைமைக்கு அனுப்ப வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த 9 தீர்மானங்களும் திமுகவின் உள்கட்டமைப்பில் மிகப் பெரிய நிர்வாக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதோடு, தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் புது ரத்தத்தையும் பாய்ச்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.