கடந்த வாரம் தெற்கு நியூ பிரன்சுவிக் (New Brunswick) பகுதியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிளாக்ஸ் துறைமுகத்தில் (Blacks Harbour) உள்ள வெலிங்டன் வீதியில் (Wellington Road) அமைந்திருக்கும் வீடு ஒன்றில் உள்ளவரின் நல்வாழ்வை உறுதிப்படுத்துமாறு (Wellness check) ஜூலை 17 ஆம் திகதி அதிகாலை 2:00 மணிக்கு முன்னர் கோரிக்கை கிடைத்ததாக அரச கனடிய குதிரைப் பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிஸார், அங்கு பெண் ஒருவரின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
உயிரிழந்தவர் 45 வயதான பாட்ரிஷியா ஹனிவெல் (Patricia Honeywell) எனப் பின்னர் அடையாளங் காணப்பட்டார்.
அன்றைய தினம் பிற்பகுதியில் செயிண்ட் ஜான் (Saint John) மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 29 வயதான ஜோர்டான் பிளான்சார்ட் (Jordan Blanchard) என்பவர் மீது தீவிரத் தாக்குதல் (Aggravated assault) நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிளான்சார்ட் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (Second-degree murder) சாட்டப்பட்டுள்ளது.
அவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பதுடன், ஆகஸ்ட் 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.