சுமார் 30,000 டாலர் மதிப்புள்ள அரிய வகை வெளிநாட்டுப் பறவைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, 19 வயதுடைய மஹ்மூத் மோ கலஃப் (Mahmoud Moe Khalaf) என்ற சந்தேக நபர் கடந்த ஜூன் 30 ஆம் திகதி ஹாவர்ட் அவென்யூவின் (Howard Avenue) 3100 ஆவது கட்டடத் தொகுதிப் பகுதியில் வைத்து அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக அத்துமீறி நுழைந்து 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள பொருட்களைத் திருடியமை, குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட 5,000 டாலருக்கும் அதிக மதிப்புள்ள சொத்துக்களைத் தன்வசம் வைத்திருந்தமை, குற்றச் செயலைச் செய்யும் நோக்குடன் முகமூடி அல்லது மாறுவேடம் அணிந்திருந்தமை மற்றும் ஒரு விலங்கு அல்லது பறவைக்குத் திட்டமிட்டுத் தேவையற்ற வலி, துன்பம் அல்லது காயத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்றாவது சந்தேக நபர் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ள போதிலும், அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் ஒரு மைனர் (சிறுவர்) என்பதால், இளம்பிராயக் குற்றவியல் நீதிச் சட்டத்தின் (Youth Criminal Justice Act) கீழ் அவருடைய பெயரைப் பகிரங்கப்படுத்த முடியாது எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கான பின்னணிகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், சட்டம் மற்றும் நீதிமன்றத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியாகவே கருதப்படுவார்.