நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் வெடித்துள்ள வன்முறை மற்றும் பதற்ற நிலைமைகளில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
சமீபத்திய விபரங்களின்படி, இந்த புதிய மோதல் சம்பவத்தில் சுமார் 25 பேர் வரை காயமடைந்துள்ளதோடு, அவர்கள் அனைவரையும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், சிறைச்சாலையின் தற்போதைய நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக, பொலிஸார் பலமுறை வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் ஒரு பதற்றமான சூழ்நிலை பதிவாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார். அங்கு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கூடுதல் பொலிஸ் குழுக்கள் சிறைச்சாலை வளாகத்திற்குள் குவிக்கப்பட்டுள்ளன.
நேற்றைய வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இன்று காலைக்குள் நிலைமை ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும், சிறைச்சாலையில் மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று நண்பகல் 1.00 மணியளவில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் இரு குழுக்களுக்கிடையே பாரிய மோதல் ஒன்று வெடித்தது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் குழுவொன்றிற்கும், ஏற்கனவே தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் குழுவொன்றிற்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று ஏற்பட்ட அந்த மோதலில் இரண்டு கைதிகள் கொல்லப்பட்டதோடு, மேலும் 38 பேர் காயமடைந்து தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.