நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது உள்ளிட்ட புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவது, ஒரு தேர்தல் வாக்குறுதியாக இருந்தபோதிலும், தற்போதைய தருணத்தில் அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமை அல்ல என்று மூத்த அரசாங்கத் தரப்பு அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (NPP), ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பிலான தனது தேர்தல் தேர்தல் அறிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்து செய்துவிட்டு, புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதாக உறுதியளித்திருந்தது.
இதற்கிடையில், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, டெய்லி மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது, புதிய அரசியலமைப்பை இயற்றுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள போதிலும், அது இந்த நேரத்தில் முன்னுரிமைக்குரிய விடயம் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்.
“இது எங்களது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் எங்களால் இதற்கு முதலிடம் கொடுக்க முடியாது,” என்று அவர் கூறினார்.
தற்போதைய அரசியலமைப்பு 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதல், ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த அரசாங்கங்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்தன. இருப்பினும், ஆங்காங்கே செய்யப்பட்ட சில திருத்தங்களைத் தவிர, அது ஒருபோதும் நடைமுறையாகவில்லை.
எவ்வாறாயினும், தனது தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு, நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான இறுதிப் பரிந்துரைகளை ஓராண்டுக்குள் சமர்ப்பிக்கும் என்று அமைச்சர் கூறினார்.
அரசாங்கம் இந்த அளவுகோல்களை எவ்வாறு மாற்ற உத்தேசித்துள்ளது என்று கேட்கப்பட்டதற்கு, “இது அனைத்தும் ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கருத்துக்களைப் பொறுத்தது. ஆளுங்கட்சி என்ற ரீதியில் நாங்கள் எங்களது சொந்த முன்மொழிவுகளை முன்வைக்கவில்லை. சம்பந்தப்பட்ட ஏனைய அனைத்து தரப்பினரின் முன்மொழிவுகளையும் ஏற்றுக்கொண்டு, அதன் மூலம் பரிந்துரைகளை உருவாக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்த முழு செயல்முறையும் ஒரு வருடத்திற்குள் நிறைவடையும்,” என்று அவர் கூறினார்.