ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதக் கூட்டம் ஒன்றின் உறுப்பினராகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் சமந்தவுக்கு ஐந்தரை வருடங்கள் கடுளீய சிறைத்தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பளித்தது.
கடந்த 2007 நவம்பர் 24 ஆம் திகதி கருக்குளிய ஜயதிஸாராமய விகாரையில் நடந்த வைபவம் ஒன்றின் போது, ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் தனசிங்க சூரசிங்கவின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதக் கூட்டம் ஒன்றின் உறுப்பினராக இருந்தமை, பிரதேச செயலாளரைத் தாக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றவாளியாகக் காணப்பட்ட அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிலாபம் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நயோமி விக்ரமசேகர இந்தத் தீர்ப்பை வெள்ளிக்கிழமை (15) அறிவித்தார். தற்போது அவர் வேறு நீதிமன்றம் ஒன்றில் நீதிபதியாகக் கடமையாற்றுகின்ற பொழுதும், நேற்றைய தினம் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்குவதற்காக அவர் சிலாபம் மேல் நீதிமன்றத்துக்கு வருகை தந்து குறித்த தீர்ப்பை அளித்திருந்தார்.
அதன்படி, 3 குற்றச்சாட்டுகளுக்குக் குற்றவாளியாகக் காணப்பட்ட ஜகத் சமந்தவுக்கு ஐந்தரை வருடங்கள் கடூளிய சிறைத்தண்டனை பிறப்பித்த நீதிபதி, மேலதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேச செயலாளருக்கு 10 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்தவும் உத்தரவிட்டார். குறித்த நட்டஈட்டைச் செலுத்தத் தவறினால் மேலும் ஒரு வருடக் கடூளிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் எச்சரித்தார்.
2007 நவம்பர் 24 ஆம் திகதி நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கும், அவரது சகோதரரான ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய அந்தச் சபையின் பொதுஜன பெரமுன உறுப்பினருமான ஜகத் சமந்த உள்ளிட்டோருக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், விசாரணையின் இடையே சனத் நிஷாந்த உயிரிழந்த நிலையில், ஜகத் சமந்தவுக்கு எதிராகத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.