வடக்கு யோர்க் (North York) பகுதியில் யூத சமூகத்தைச் சேர்ந்த மூவர் மீது போலித் துப்பாக்கியால் (Replica firearm) தாக்குதல் நடத்திய சந்தேக நபர் ஒருவரை ரொறன்ரோ பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை பாத்தர்ஸ்ட் வீதி (Bathurst Street) மற்றும் லோரன்ஸ் அவென்யூ வெஸ்ட் (Lawrence Avenue West) சந்திப்புப் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது ஒரு வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட (Hate-motivated) தாக்குதலாகக் கருதப்பட்டு விசாரணை செய்யப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது வெளிப்படையாகத் தெரியும் வகையில் வீதியில் நடந்து சென்ற மூவர் மீது, நீல நிற எஸ்.யு.வி (SUV) ரக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் ‘ஓர்பீஸ்’ (Orbeez-type) வகையிலான போலித் துப்பாக்கியால் சுட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பிறகு சந்தேக நபர் வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். அந்த நீல நிற வாகனம் அங்கிருந்து தப்பிச் செல்லும் காணொளியைப் பொலிஸார் சனிக்கிழமை வெளியிட்டுள்ளனர். எனினும், சந்தேக நபர் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸாரையோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பையோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.