சாகரிகா ரயில் தடம் புரண்டதில் கொங்ரீட் சிலிப்பர்களுக்கு (Concrete Sleepers) சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், சிலிப்பர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததா? என்பதை இப்போதே உறுதியாகக் கூற முடியாது எனவும் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து ஆராய்வதற்காக விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இந்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை எனவும், தண்டவாளத்தில் இருந்து ரயில் தொகுதியை அகற்றிய பின்னரே சேத விபரங்களை முழுமையாகக் கூற முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஊடகப் பேச்சாளர் அசங்க சமரசிங்க,
“இரட்டை மின்சக்தி ரயில் தொகுதியே விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து இதுவரை மதிப்பீடு செய்யப்படவில்லை. ரயில் தொகுதியை அகற்றிய பின்னரே தண்டவாளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்துக் கூற முடியும். கொங்ரீட் சிலிப்பர்கள் சேதமடைந்துள்ளன. ஆனால் அவை தரம் குறைந்தவை என்று கூற முடியாது. இவை முறையான கொள்முதல் நடைமுறைகள் ஊடாகப் பெறப்பட்டவை. ரயில் பாதையின் எல்லா இடங்களிலும் அதே சிலிப்பர்களே உள்ளன. சிலிப்பர்களில் ஏற்பட்ட சிக்கலால் தான் இது நடந்ததா? என்பதை இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு குழுவை நியமித்துள்ளோம், அவர்களின் அறிக்கை கிடைத்த பின்னரே இறுதி முடிவைக் கூற முடியும்.” என்றார்.