2019 உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாரிய முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நேற்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த பல சாட்சிகள் தங்கள் சாட்சியங்களைத் திரும்பப் பெறுமாறு இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அழுத்தம் கொடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுதங்களை வைத்து சிக்கவைக்கும் சதி: கடந்த வழக்கு விசாரணையின் பின்னர் ஒரு சாட்சியின் வீட்டிற்குச் சென்ற இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் அவரை மிரட்டியுள்ளதுடன் அவரது வீட்டில் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்து ( வேறொரு சட்ட அமலாக்கப் பிரிவின் மூலம் அவரைக் கைது செய்யச் சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் திலீப பீரிஸ் குற்றம் சாட்டினார்.
விசாரணை முடக்கம்: 2018 வவுணதீவு பொலிஸ் கொலை மற்றும் 2019 சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்ப முயற்சிகள் நடப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“எட்டாம் ஆண்டு நிறைவுக்குள் நீதி”:
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் என்பது ஒரு பாரிய திட்டமிடப்பட்ட சதி என்று குறிப்பிட்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதனை மூடிமறைக்க முன்னதாக எடுக்கப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்படும் என்றும் 2027 ஏப்ரல் மாதம் வரவுள்ள எட்டாம் ஆண்டு நினைவு தினத்திற்கு முன்னதாக அனைத்து சதிகாரர்களும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.
நீதிமன்றத்தின் அவதானிப்பு:
இந்த வழக்கை விசாரித்த நீதவான் சுரு நெத்திகுமார “இது ஒரு விளையாட்டு அல்ல” எனக் குறிப்பிட்டதுடன்இ இந்த விவகாரம் மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்பதால் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களை மட்டுமே சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சுரேஷ் சல்லேவின் நிலை:
இந்த வழக்கின் மூன்றாவது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இக்குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்த போது சுரேஷ் சல்லே பதவியில் இருக்கவில்லை அல்லது நாட்டில் இருக்கவில்லை என வாதிட்டனர்.
இதனையடுத்துஇ சுரேஷ் சல்லேவை எதிர்வரும் வழக்கு விசாரணை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.