சுமார் 775,000 ரூபாய் பெறுமதியான அலங்காரச் செடிகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற நபர் ஒருவர், இன்று சனிக்கிழமை (11) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயங்கொடை பகுதியைச் சேர்ந்த இந்த சந்தேக நபர், இன்று அதிகாலை 12:45 மணியளவில் பெங்களூரில் இருந்து வருகை தந்த இண்டிகோ – 6E-1183 விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளார்.
விமான நிலையத்தின் வருகை முனையத்தில் Green Channel ஊடாக, வெளியேற முயன்ற போது, அவரது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 229 அலங்காரச்செடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அவை அனுமதிப் பத்திரங்களின்றி கொண்டுவரப்பட்டவை என்பதும், இலங்கையின் தாவரத் தனிமைப்படுத்தல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய செயல் என்பதும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னர், கொண்டுவரப்பட்ட அலங்காரச் செடிகள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு அரசுடைமையாக்கப்பட்டன. அத்துடன், சந்தேக நபருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.