அவுஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ள “உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு” பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
சிட்னியில் இயங்கும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) வெளியிட்ட இந்த பட்டியலானது, 2026ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக பாகிஸ்தான் விளங்குவதை எடுத்துக்காட்டுகிறது.
163 நாடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கரவாதத்தின் தாக்கத்தை ஆய்வு செய்வதாக இந்தப் பட்டியல் அமைந்துள்ளது.
2011ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்துக்கு வந்திருப்பது 25 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்ந்த ஒன்றாக தெரிவிக்கப்படுகிறது.
பட்டியலை வெளியிட்ட நிறுவனத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதன்படி, பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் (2025) 1,139 பேர் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனர் என்றும் இது முந்தைய ஆண்டை விட 6 வீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அந்த நாட்டில் 1045 பயங்கரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுக்கும் அண்டை நாடுகளுக்கும் இடையிலான மோதல்கள் குறிப்பாக, ஆப்கானிஸ்தானுடனான மோதலின் தீவிரத்தன்மையை குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பு மற்றும் பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) ஆகிய அமைப்புகளின் வன்முறை குற்றச்செயல்கள், தாக்குதல்கள் பாகிஸ்தானில் அதிகரித்திருப்பதாகவும் இது அந்நாட்டில் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும் குறித்த பயங்கரவாத பட்டியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.