கல்வி அமைச்சினால் தற்போது 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மையமாகக் கொண்டு, பாடசாலைச் சப்பாத்து கொள்வனவிற்காக வழங்கப்படும் வவுச்சர் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கும் இடையில் பாராளுமன்றக் குழு அறையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
கல்வி அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து புதிய திட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ள இதன் மூலம், 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகள், 251 – 500 வரையிலான மாணவர்கள் உள்ள தோட்டப் பாடசாலைகள், விசேட தேவையுடைய பிள்ளைகள் உள்ள பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களைச் சேர்ந்த பிக்குமார் மற்றும் மாணவச் சமூகம் உள்ளிட்ட பாடசாலை மாணவர்களுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலைச் சப்பாத்துகளைக் கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
இலங்கை நெசவு மற்றும் ஆடை நிறுவனத்தினால் இந்தக் காலணிகளின் தரம் கண்காணிக்கப்படும்.
இந்தத் திட்டத்திற்காக, கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சில் பதிவுசெய்யப்பட்ட உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மட்டுமே தெரிவு செய்யப்படுவார்கள்.
உற்பத்தியாளர்கள் ஒரு வருட உத்தரவாதத்தின் கீழ் தரமான சப்பாத்துகளை வழங்க இணங்கியுள்ளதாகவும், விற்பனையாளர்கள் நேரடியாகப் பாடசாலைகளுக்குச் செல்வதன் மூலம் மாணவர்கள் சரியான அளவிலான சப்பாத்துகளைத் தெரிவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் எனவும் கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்கள் பிரதமரின் முன்னிலையில் தெரிவித்தார்.
இதன் முன்னோடித் திட்டத்தின் கீழ், மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இதன் சாத்தியக்கூறு ஆய்வு செய்யப்பட்டதன் பின்னர், ஏனைய மாகாணங்களில் இத்திட்டத்தைச் செயற்படுத்துவது பொருத்தமானது எனப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கூட்டத்தில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அவர்களும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி. திலகா ஜயசுந்தர அவர்களும் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
By C.G.Prashanthan