தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd leg) கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கை அணியைப் பலப்படுத்தும் வகையில் பிரான்ஸ் என்டென்டே சனொய்ஸ் சென் கிரேஷன் (Sannois Saint – Gratien) கழகத்தைச் செர்ந்த ரெஜிஸ் கெனிஸ்டன் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய மத்திய இடது கள வீரரான ரெஜிஸ் கெனிஸ்டன் முதல் தடவையாக இலங்கை அணியில் இடம்பெறவுள்ளார்.
அவரது வருகை இலங்கை அணியை மேலும் பலப்படுத்தும் என கால்பந்தாட்ட இல்ல கேட்போர்கூடத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்தார்.
ரெஜிஸ் கெனிஸ்டனுடன் உள்ளூர் வீரர் ஒருவர் இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் கிண்ணியாவைச் சேர்ந்த கோல் காப்பாளர் அஹமத் ஷெரிவ் இலங்கை குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
ஆனால், அவரை விட மூத்தவரும் அனுபவசாலியுமான களுத்துறையைச் சேர்ந்த கோல்காப்பாளர் கவீஷ் பெர்னாண்டோ அணியில் இடம்பெறுவதால் அவர்கள் இருவரில் யார் கோல்காப்பாளராக விளையாடுவார் என்பது அறிவிக்கப்படவில்லை.
வழமையான அணித் தலைவரும் கோல்காப்பாளருமான சுஜான் பெரேரா சுகவீனமுற்றிருப்பதால் தாய்லாந்துக்கு எதிரான நாளைய போட்டியில் பெரும்பாலும் ஆதவன் ராஜமோகன் அணித் தலைவராக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ணம் சவூதி அரேபியா 3ஆம் சுற்று தகுதிகாண் போட்டி இரண்டு அணிகளுக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்த அதேவேளை, கடினமான போட்டி என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் அப்துல்லா அல் முத்தய்ரி தெரிவித்தார்.