ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஜனாதிபதி, பாராளுமன்ற தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் ஆட்சிப்பொறுப்பெடுத்து ஆண்டொன்று நிறைவடைந்தும் நிறைவேற்றப்படாதிருக்கும் நிலையில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு தனது மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானித்திருந்தது.
அதனையடுத்து தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை குறித்து நேரடியாகப் பேசுவதற்கு நேரம் ஒதுக்கி தாருங்கள் என்று கோரி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும் ஒப்பமிட்டு கடிதம் ஒன்றை கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் அனுப்பியிருந்தனர்.
அதேநேரம், சிவஞானம் சிறிதரனும், இராசமாணிக்கம் சாணக்கினும் ஜனாதிபதியுடன் சந்திப்பை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தனர்.
தமிழரசுக்கட்சியினை புதன்கிழமை (19) சந்திப்பதற்கு ஜனாதிபதி நேர ஒதுக்கீட்டை வழங்கியுள்ளார். குறித்த நேர ஒதுக்கீடு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டமைக்கு அமைவாக இலங்கைத் தமிழரசுக்கட்சி 2026ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காதிருந்தது.
இந்நிலையில் சந்திப்பில் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் வடக்கு,கிழக்கு எம்.பிக்கள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.