முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 50 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி காணியை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு விசாரணைகள் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பசில் ஆஜராக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவில், நாற்காலியில் இருந்து விழுந்ததைத் தொடர்ந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்புச் சிக்கல்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக பசில் ராஜபக்சவின் சட்டக் குழு கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
6 மாதங்களுக்கு விமானப் பயணத்தைத் தவிர்க்குமாறு அமெரிக்க மருத்துவர் அவருக்கு அறிவுறுத்தியுள்ளதால், வெள்ளிக்கிழமை வழக்கில் ஆஜராக அவர் இலங்கைக்குத் திரும்புவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முந்தைய விசாரணைகளில் அவர் ஆஜராகாததால், அவரது பிணை இரத்து செய்ய வழக்கறிஞர்கள் கோரியுள்ளனர். எனினும், முந்தைய இணக்கத்தைக் குறிப்பிட்டு நீதிமன்றம் மறுத்து, அடுத்த திகதியில் கட்டாயம் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இடம்பெறவுள்ள தினத்தில், பசில் ராஜபக்ஷவால் நிறுவப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையில் பாரிய எதிர்ப்பு பேரணி ஒன்று நுகேகொடையில் இடம்பெறவுள்ளது.
அநுர அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பசில் ராஜபக்ச கலந்து கொள்ளலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.
பசில் ராஜபக்ஷ பயணம் செய்ய விரும்புகிறாரா என்பது குறித்து அவரது பிரதிநிதிகளிடமிருந்தோ அல்லது குடும்பத்தினரிடமிருந்தோ அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.