1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் என்பது ஒரு கலாச்சாரமாக மாறி வருகிறது, அதனை மாற்றி அமைக்க தற்போதைய அரசு முயற்சிக்கிறது என்று பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறைப் பேராசிரியர் ரமேஸ் ராமசாமி தெரிவித்தார்.
நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் கண்டி ஶ்ரீ புஸ்பதான மண்டபத்தில் நடத்திய சிவில் அமைப்புக்களின் அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டத் அவர் இதனைத் தெரிவித்தார். நீதியான சமூகத்திற்கான தேசிய இயக்கம் நடத்தி வரும் கூட்டத் தொடரில் 251 வது கூட்டம் கண்டியில் இடம் பெற்றது.
இக்கூட்டத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024ம் ஆண்டு சர்வதேச ஆய்வுகள் இரண்டில் இலங்கை பற்றிய விடயங்கள் வெளியிடப்பட்டன. அதில் ஒன்று சுவீடனை மையமாகக் கொண்ட ஒரு அமைப்பு வெளியிட்ட தகவலாகும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஜனநாயம் வளர்ச்சி கண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட 108 நாடுகளில் இலங்கைக்கு 58 வது இடத்தை வழங்கியுள்ளது. இதற்கு ஆதாரமாக இறுதியாக நடந்த தேர்தல்கள் நியாயமாக நடந்துள்ளதாகவும் அதற்கு முன்னர் அந்த அளவு நம்பகத்தன்மை இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல் அமேரிக்காவின் “பிரீடம் ஹவுஸ்” என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்விலும் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட்டமை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபக்ஷ ஆட்சிகளில் ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் இடம் பெற்றதாகக் காட்டிக் கொண்டாலும் முற்று முழுதாக அவ்வாறு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு சர்வதேச ஆய்வுகள் இலங்கை பற்றி பல்வேறு தகவல்களை வெளியிட்ட போதும் அதில் ஒரு உண்மையை வெளிக்காட்டியுள்ளது. அதாவது 1978ம் ஆண்டின் பின் இலங்கையில் ஊழல் சாதாரண ஒரு விடயமாகவும், ஒரு கலாச்சாரமாகவும் மாறியுள்ளதமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இருப்பினும் தற்போதைய அரசு ஊழல் ஒழிப்பு விடயத்தில் ஈடுபட்டுள்ளதை வரவேற்கமுடியும். இருப்பினும் அரசியல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப்பட வில்லை எனலாம்.
அதே போல் தனி நபர் சார்ந்த மனித உரிமைகள் பற்றிய ஏற்பாடுகள் காணப்பட்டாலும், ஒரு பரந்த குழு சார்பான மனித உரிமைகள் பற்றிய விடயம் குறைவாகவே உள்ளன. உதாரணமாக உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பாக பாலினம் சார்ந்த கோட்டாக்கள் (பெண்களுக்கான ஒதுக்கீடு) இருந்த போதும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக பெண்களுக்கான ஒதுக்கீடு பற்றி ஏதும் இல்லை.
நாம் இலங்கையர் என்ற கருத்தை வளர்க்க பல்வேறு முயற்சிகள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டாலும் இனத்துவ அடையாளங்களுக்கு மதிப்பளிக்கும் திட்டங்கள் குறைவாக உள்ளன. நாட்டின் பல்வகைமையை மதிக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் தேவை.
எனவே நீதிக்கான ஒரு சமூகத்தை கட்டி எழுப்பும்போது இவ்விடயங்களும் கவணத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
இங்கு உரையாற்றிய பேராசிரியர் ரொகான் சமரஜீவ தெரிவித்தாவது,
இலங்கையில் பின்பற்ற முயற்சிக்கப்பட்ட குடும்ப ஆட்சி என்ற விடயத்தை வண. மாதுலுவாவே சோபித தேரர் தலைமையிலான ‘சாதாரண சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ 2012ல் மாற்றி அமைக்க பங்களிப்பு செய்தது. அதே போல் 40 வருடங்களுக்கு முன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
இது சுமார் 6 மாத காலத்திற்கு மட்டுமே என்று கூறப்பட்டது. புலிகளை அடக்குவதற்கு மட்டுமே என்று கூறப்பட்டது. ஆனால் 40 வருடமாகியும் அது இன்னும் அமுலில் உள்ளது.சிறிய விடயங்களுக்கும் அது பயன்படுத்தப்படுகிறது. இவை மாற்றப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தில் நாட்டு மக்கள் விரும்பும் இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்த ‘சாதாரண சமூகத்திற்கான தேசிய இயக்கம்’ முயற்சி எடுக்கும் என்றார்.
பேராதனைப்பர்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் உபுல் திசாநாயக்கா, பேராசிரியர் சுனில் ஜயசேக்கர, கலாநிதி ஆரியரத்தன ஹேரத் உற்பட பலர் உரையாற்றினர்.