சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஒரு பெண் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம் போலீசார்.
சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் பங்களாவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அக்டோபர் மாதம் 27ம் தேதி ரஜினிகாந்த் மற்றும் அவரின் முன்னாள் மருமகனான தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
உடனே அவர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, அந்த தகவல் பொய் என்று தெரிய வந்தது. இந்நிலையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒரு பெண் போன் செய்து ரஜினிகாந்தின் பங்களாவில் குண்டுவெடிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.
போனில் பேசியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் சென்னை அயன்பாக்கத்தை சேர்ந்த ராதா என்பது தெரிய வந்தது. உடனே ராதாவிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தான் 34 வயதாகும் ராதா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து கீழ்பாக்கத்தில் இருக்கும் அரசு மனநல மருத்துவமனையில் அவரை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
தொடரும் மிரட்டல்: ரஜினிகாந்த் வீட்டிற்கு தற்போது மட்டும் 4 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. அஜித் குமார், குஷ்பு, கே. எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனை செய்ததில் தான் குண்டு எதுவும் இல்லை வேண்டுமென்றே பொய் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிய வந்தது.
பிரபலங்களின் வீடுகளில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொடர்ந்து இமெயில் மூலம் மிரட்டில் வந்து கொண்டிருக்கிறது. இப்படி பொய்யாக இமெயில் அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், போலீசாரின் நேரத்தை வீணடிக்கும் நபர் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.