கனடா நாட்டின் இரண்டு முக்கிய மாகாணங்களான கியூபெக் (Quebec) மற்றும் அல்பர்ட்டா (Alberta) ஆகியன தன்னாட்சி அல்லது சுதந்திரம் குறித்து எதிர்காலத்தில் வாக்கெடுப்புகளை நடத்த வாய்ப்புள்ள நிலையில், அதில் வெளிநாட்டு எதிரிகள் தலையிடக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனேடிய உளவுத்துறையின் தலைவர் டான் ரோஜர்ஸ் (Dan Rogers) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஒரு G7 நாட்டை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்பாக, இந்த வாக்கெடுப்புகளை வெளிநாட்டவர் கருதக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு சக்திகள் கனேடியர்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதையும், குறிப்பிட்ட கருத்துகளைத் தீவிரப்படுத்துவதையும் கனேடிய உளவுத்துறை அவதானிக்கும் என்றும் ரோஜர்ஸ் கூறியுள்ளார்.
கனேடியர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் கனேடிய உளவுத்துறைக்கு எந்தப் பங்கும் இல்லை என்றாலும், கனடாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வெளிநாடுகளின் நோக்கங்களையும் நடவடிக்கைகளையும் அடையாளம் காண்பது உளவுத்துறையின் முக்கியப் பணியாகும் என, ரோஜர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.