அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அண்மையில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது.
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான திட்டம் மற்றும் முறையான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் அடங்கிய உப குழுவின் இடைக்கால அறிக்கை உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சியினால் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது.
பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன. அதற்கமைய, இந்த விடயம் தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அத்துடன், அரச சேவையில் பத்து ஆண்டுகளுக்கும் அதிகமான சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியவர்களுக்கு, அந்த உறுப்பினர் பதவிக்கு வருவதற்கு முன்னர் அவர்கள் சேவையாற்றிய பதவிக்குரிய ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்பது குறித்தும் இங்கு முன்மொழியப்பட்டது.
அரசாங்க வேலையை விட்டு பாராளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவருக்கு, உறுப்பினர் ஓய்வூதியமும் கிடைக்காததால், இந்த விடயம் தொடர்பில் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதன்படி தனது கவனத்தைச் செலுத்த எதிர்பார்ப்பதாகவும் குழுவின் தலைவர் இங்கு தெரிவித்தார்.
சேவைப் பிரமாணக் குறிப்புக்கள், ஆட்சேர்ப்பு நடைமுறைகள், பதவி உயர்வு நடைமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வினைத்திறன்காண் தடைதாண்டல் (efficiency bar) மதிப்பெண் வரம்புகளை பொதுச் சேவை ஆணைக்குழு மாற்றியமைத்ததன் காரணமாக அரச சேவைக்குள் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்தச் சிக்கல் குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தக் குழு கூட்டத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.