எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்’ என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார்.
கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார்.
அப் போட்டியில் 32 பந்துகளில் 100 ஓட்டங்களைப் பூர்த்தி செய்து இந்தியா சார்பாக ரி20 போட்டிகளில் இரண்டாவது அதிவேக சதத்தைக் குவித்த ரிஷாப் பான்டின் சாதனையை சமப்படுத்தினார்.
இந்தியாவில் நடைபெற்றுவரும் முஷ்தாக் அலி கிண்ணத்துக்கான ரி20 கிரிக்கெட் போட்டியில் கடந்த வருடம் குஜராத் அணிக்காக உர்வில் பட்டேலும் பஞ்சாப் அணிக்காக அபிஷேக் ஷர்மாவும் 28 பந்துகளில் சதங்களைப் பூர்த்தி செய்து இந்தியாவுக்கான அதிவேக சதங்களைப் பெற்ற சம சாதனையாளர்களாக இருக்கின்றனர்.
ரிஷாப் பான்ட் 2018இல் டெல்ஹி அணிக்காக 32 பந்துகளில் ரி20 சதத்தைப் பூர்த்திசெய்திருந்தார்.
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆசிய கிண்ண உதய தாரகைகள் ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி சார்பாக சூரியவன்ஷி 42 பந்துகளில் 11 பவுண்டறிகள், 15 சிக்ஸ்களுடன் 142 ஓட்டங்களைக் குவித்து 13ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இதன் மூலம் 14 வயது 232 நாட்களில் இந்திய தேசிய பிரதிநிதித்துவ அணிக்காக சதம் குவித்த மிகவும் இளைய வீரர் என்ற சாதனையைப் படைத்து சூரியவன்ஷி பெருமை பெற்றார்.
இதற்கு முன்னர் மிக இளம் வயதில் சதம் குவித்த வீரர் என்ற சாதனையை 2005இல் ஸிம்பாப்வே ஏ அணிக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் ஏ அணி வீரர் முஷ்பிக்குர் ரஹிம் (ஆட்டம் இழக்காமல் 111) நிலைநாட்டி இருந்தார். அப்போது அவருக்கு 16 வயது 171 நாட்கள் ஆகும்.
‘எனது இந்த ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு எல்லா புகழும் எனது தந்தைக்கே உரித்தாகும்’ என அவர் மேலும் கூறினார்.
‘சிறு பராயத்திலிருந்தே எனது தந்தை என்னைக் கண்டிப்புடன் வளர்த்தார். அப்போதெல்லாம் அவர் ஏன் இவ்வளவு கண்டிப்பாக இருக்கிறார் என நான் சிந்திப்பேன். ஆனால், அதன் பலாபலன்களை மைதானத்தில் இப்போது நான் உணர்கிறேன். எனது கவனத்தை சிதறடிக்கவிடாமல் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வைத்தார். அத்துடன் நான் கடினமாக உழைக்க வேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார். எனவே எனக்கு கிடைக்கும் எல்லா விடயங்களுக்கும் எனது தந்தைக்கே நன்றி கூறுவேன். ஏனேனில் அவர் இல்லாமல் நான் இந்தளவு உயர்ந்திருக்க மாட்டேன்’ என்றார் சூரியவன்ஷி.