ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேரவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களில் ஒருவரை உடனடியாக பல்கலைக்கழகத்தின் நிரந்தர துணைவேந்தராக நியமிக்கக் கோரி ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் சங்கம் (RUTA) பதினைந்து நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தத்தில் இன்றும் (14) ஈடுபட்டுள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கடந்த 4ஆம் திகதி இந்தப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வினை வழங்குவதாக உறுதியளித்தபோதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த விடயத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பைக் கோரி அனுப்பப்பட்ட கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
அனைத்து பீடங்களின் பல்கலைக்கழக ஆசிரியர்களின் பங்கேற்புடன் 11ஆம் திகதி கூடிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் விசேட பொதுக் கூட்டத்தின்போது இந்தச் செயல்முறையை சட்டவிரோதமாக நிறுத்தி வரும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக அவர்கள் தொழில்முறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென ஒருமனதாக முடிவு செய்யப்பட்டன.
கடந்த 12ஆம் திகதி கூடிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA) பிரதிநிதிகள் குழு, ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் போராட்டத்துக்கு முழு ஆதரவையும் வழங்க ஒருமனதாக முடிவு செய்தது.
இந்நிகழ்வில் பேசிய தூதுக்குழு உறுப்பினர்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சமீபத்திய வரலாற்றில் தொடர்ந்து சட்டவிரோத தலையீடுகளில் ஈடுபட்டமை கவனிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.
மிக நெருக்கமான நிகழ்வுகளாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறையிலும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கும் செயல்முறையிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்டவிரோதமாகவும் முறையற்றதாகவும் தலையிட்டதாகக் சுட்டிக்காட்டினர்.
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு மூன்றாவது முறையாக விண்ணப்பங்கள் கோரப்பட்டதன் மூலம் ஆணைக்குழு தற்போது தனக்கு அதிகாரம் இல்லாத ஒரு பணியில் ஈடுபட்டுள்ளதாக சகோதர சங்கங்களின் பிரதிநிதிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.
அதன்படி, ருஹுணு, கிழக்கு மற்றும் ரஜரட்டவில் தொடங்கிய இந்த சட்டவிரோத மற்றும் தன்னிச்சையான செயல்முறை எதிர்காலத்தில் மற்ற பல்கலைக்கழகங்களுக்கும் பரவுவதைத் தடுக்க ஒரு நிலையான வேலைத்திட்டத்தில் ஈடுபட வேண்டிய அவசரத் தேவை தெளிவாகியது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கக் கூட்டமைப்பு, எதிர்காலத்தில் கூட்டப்படும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில், தற்போது நடைபெற்று வரும் வேலைநிறுத்தத்திற்கான தனது நிலைப்பாடு மற்றும் ஆதரவு குறித்து ஊடகங்களுக்குத் தெரிவிக்கவுள்ளனர்.
அதன்படி, இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தால் தொடங்கப்பட்ட தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தின் முதன்மையான கோரிக்கையான பல்கலைக்கழக நிர்வாகக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களில் ஒருவரை உடனடியாக துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கும் வரை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடரும் என்று ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் நாலக கீகியனகே தெரிவித்தார்.