தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
இவை இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ‘ரண் மல்லி’ என்ற நபர், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கடாவின் போதைப்பொருளை நாட்டுக்குள் விநியோகித்தவர் என்றும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றத்த தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும், தங்காலை பிரிவுக்குட்பட்ட சில பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, 329 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, பிரதான சந்தேகநபர் ஒருவரிடமிருந்து செயற்கைக்கோள் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளை கரைக்கு கொண்டு வந்த படகைச் செலுத்தியவர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.