ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா, பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.
பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர தன்னைத் திட்டி, முட்டாள் என்று கூறி, சபைக்கு மீண்டும் வர வேண்டாம் என அச்சுறுத்தியதாகக் கூறி, நிகினி அயோத்யா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சிலாபத்தில் நேற்று (13) ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தமது பதவி விலகல் முடிவை அறிவித்தார்.
இங்கு பேசிய உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், ஒரு பெண்ணை இழிவுபடுத்திய தவிசாளரை கடுமையாகக் கண்டித்ததுடன், அவர் மனநல மருத்துவரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், சம்பவம் குறித்து பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், அந்த நேரத்தில் சில பிரச்சினைகள் மற்றும் வரவு செலவு திட்ட அமர்வில் எதிர்க்கட்சியின் நடத்தை காரணமாக தான் மன அழுத்தத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அந்தப் பெண் உறுப்பினரை அலுவலகத்திலிருந்து வெளியேறுமாறு தெரிவித்ததாகவும் ஏற்றுக்கொண்ட போதும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆராச்சிகட்டுப் பொலிஸார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.