தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘மை டியர் சிஸ்டர்’ என பெயரிடப்பட்டு, அதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மை டியர் சிஸ்டர்’ எனும் திரைப்படத்தில் அருள்நிதி, மம்தா மோகன் தாஸ், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சகோதர பாசத்தை மையப்படுத்தி கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேசன் ஸ்டுடியோஸ் மற்றும் கோல்டுமைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் மனிஷ் ஷா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கான திட்டமிடலில் காத்திருக்கும் தருணத்தில் படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் அக்கா- தம்பி இடையேயான உறவையும், இதில் தலையில் கொட்டுவது என்ற உடலில் சார்ந்த துன்புறுத்தல் காட்சிகளும், இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.