தெற்காசிய ஊடக பெண்களுக்கான பிராந்திய அமைப்பான South Asian Women in Media (SAWM), பெண் ஊடகவியலாளர்களின் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய பயிற்சித் தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
மேற்படி இந்த பயிற்சி பட்டறையானது, கொழும்பு 3 இல் அமைந்துள்ள மென்டரினா ஹோட்டலில் இடம்பெற்றது.
ஊடகத்துறையில் தொழில்நுட்பத்தின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெற்காசிய ஊடகப் பெண்கள் அமைப்பு இப்பயிற்சித் தொடரை மூன்று மொழிகளிலும் நடைமுறைப்படுத்தியுள்ளது. முதலாம் கட்டப் பயிற்சி ஆங்கில ஊடகவியலாளர்களுக்காகவும், இரண்டாம் கட்டம் சிங்கள ஊடகவியலாளர்களுக்காகவும் முன்னெடுக்கப்பட்டது.
நவம்பர் 11 ஆம் திகதி நிறைவு பெற்ற மூன்றாவது கட்டப் பயிற்சி, தமிழ்ப் பெண் ஊடகவியலாளர்களுக்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள், AI கருவிகளைப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வு, போலிச் செய்தி கண்டறிதல், மற்றும் நம்பகத்தன்மைச் சோதனை போன்ற நவீன ஊடகவியல் திறன்களை கற்றுக்கொண்டனர்.
இந்த முயற்சி, தமிழ்ப் பெண் ஊடகவியலாளர்கள் நவீன தொழில்நுட்பச் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும், தங்கள் செய்தித் துறைப் பணியை வலுப்படுத்தவும் உதவும் என இந்த
அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தப் பயிற்சி பட்டறை, சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிபுணரான டாக்டர் சஞ்சன ஹட்டோட்டுவா அவர்களால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்பட்டது.
By C.G.Prashanthan