அமெரிக்காவில் நேற்று சனிக்கிழமை (08) ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் அனுமதியை பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படாததால் அனைத்து துறைகளும் முடங்கின. குறிப்பாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அத்தியாவசிய துறையில் பணிபுரியும் 7 இலட்சம் பேர் ஒரு மாதமாக சம்பளம் இன்றி வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் 6.5 இலட்சம் பேர் கட்டாய விடுப்பில் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 50 சதவீதம் அளவுக்கு ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக சனிக்கிழமை ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.
இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக போக்குவரத்து துறை மந்திரி சீன் டபி தெரிவித்துள்ளார். இதனால் இலட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ட்ரம்ப் தலைமையிலான அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.