இந்தியாவிலும் இலங்கையிலும் நடந்து முடிந்த 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டம், பந்துவீச்சு, விக்கெட் காப்பு ஆகியவற்றில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய 11 வீராங்கனைகள் உலகக் கிண்ண தெரிவு அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
தென் ஆபிரிக்க அணித் தலைவி லோரா வுல்வார்டை தலைவியாகக் கொண்ட உலகக் கிண்ண தெரிவு அணியில் பாகிஸ்தான் வீராங்கனை சிட்ரா நவாஸ் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் விக்கெட் காப்பாளர் நிலையில் சிட்ரா நவாஸ் மிகச் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக தெரிவு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற மகளிர் உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணித் தலைவி ஹாமன்ப்ரீத் கோரின் மிகவும் கடினமான பிடியை சிட்ரா இடப்புறமாக தாவி எடுத்த விதமும் அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் கிம் கார்த்தை மின்னல் வெகத்தில் ஸ்டம்ப் செய்த விதமும் அனைவரையும் பிரமிக்கவைத்தது.