இலங்கை கடற்படைக்கு செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துடனான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
25.11.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது. இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பான் அரசின் நிதி மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு மற்றும் ஜப்பான் கடலோரப் பாதுகாப்புப் படையின் விசேட நிபுணத்துவ ஒத்துழைப்பின் கீழ் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் “இந்து – பசுபிக் வலயத்தின் சமுத்திரப் பாதுகாப்பு மற்றும் சமுத்திர சட்டம் ஒழுங்குகளைப் பலப்படுத்தல்” எனும் கருத்திட்டம் 2024 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
குறித்த கருத்திட்டத்தின் கீழ் இலங்கை கடற்படைக்கு ‘Congnyte S12’ செய்மதி தொடர்பாடல் இடைமறிப்பு கட்டமைப்பை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றச் செயல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் வேறு மோசமான சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்தல், இல்லாதொழித்தல் மற்றும் அவ்வாறான செயல்களுக்கு குறுக்கறுத்தல் மூலம் இலங்கை கடற்படையின் சமுத்திரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், அதன்மூலம் பிராந்திய ரீதியாகவும் மற்றும் சர்வதேச சமுத்திரப் பாதுகாப்புத் தொடக்க முயற்சிகளுக்காக இலங்கையின் ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்த முடியும்.
குறித்த கட்டமைப்பை எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான இறுதிப் பயனர் மற்றும் ஒப்படைத்தல் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.