அவுஸ்திரேலிய முதலீட்டாளரை ஏமாற்றி 180 மில்லியன் ரூபாய் மோசடி செய்து நாட்டை விட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் இந்தியாவில் இருந்து கடல் வழியாக மீண்டும் நாட்டிற்குள் நுழையும் போது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை படகு மூலம் கொண்டு வந்த தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களில் முக்கிய சந்தேக நபர் மன்னார் முருங்கன் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன்,அவர் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையின் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் மனைவி ஒரு அரசு சாரா அமைப்பை நடத்துபவர், சமூக சேவைகளைச் செய்வதாகக் கூறப்படுவதாகவும் குற்றப் புலனாய்வுத் துறை கூறுகிறது. சந்தேக நபரின் மனைவியுடன் 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய நாட்டவர் ஒருவர் இணைந்து பணியாற்றி வந்துள்ளார். அப்போது மோசடியில் ஈடுபட்ட நபர் அவுஸ்திரேலிய நாட்டவரின் பெயரில் இலங்கையில் முதலீடு செய்ய ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு உடன்பட்ட வெளிநாட்டவர் பணம் கொடுத்துள்ளார்.
சந்தேக நபர், தனது சொந்த பெயரில் பல தொழில்களைத் தொடங்கியுள்ளார்.முதலீட்டாளரின் பெயரில் அல்லாமல், தனது சொந்த பெயரில் பல வாகனங்களையும் பதிவு செய்துள்ளார்.
வெளிநாட்டவர் செய்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் நடந்து போது, சந்தேக நபர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். பின்னர் சந்தேக நபர் மனைவி மற்றும் உறவினர்கள் சந்திக்க கடல் வழியாக இலங்கை திரும்பியதும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.