களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் அரசியல் விஞ்ஞானத் துறை மற்றும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் ‘பங்கேற்பு ஜனநாயகம்’ தொடர்பான சான்றிதழ் கற்கை நெறி ஆரம்பமாகியுள்ளது.
இந்நிகழ்வில், கற்கைநெறிக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளம் அரச கிராமிய கள அதிகாரிகளுக்குத் தலா 40,000 ரூபா பெறுமதியான 100 முழு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள், கமநல சேவை அதிகாரிகள் உள்ளிட்ட 100 கிராமிய மட்ட கள அதிகாரிகள் முதல் இரண்டு குழுக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அடிப்படை மட்டத்தில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் கற்கைநெறி மூலம், ஜனநாயக ஆட்சி, நல்லாட்சி மற்றும் சிவில் பங்குபற்றல் குறித்து ஆழமான அறிவையும் நடைமுறைப் பயிற்சியையும் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
கற்கைநெறி இணைப்பாளர் கலாநிதி தீகா தமயந்தி இதன் நோக்கங்களை தெளிவுபடுத்தியபோது, இலங்கையில் ஜனநாயக நடைமுறைகளை வலுப்படுத்தும் அரச ஊழியர்களை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய படியாகும் இது என வலியுறுத்தினார்.
கற்கைநெறிக்கான நிதி அனுசரணையை வழங்கும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பின் தலைவர் ரவீந்திர டி சில்வா கருத்து தெரிவிக்கையில், எமது நாட்டின் கிராமிய அரச சேவையில் ஜனநாயக விழுமியங்கள், புரிதல் மற்றும் அர்ப்பணிப்புக்காக முதலீடு செய்யக் கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்த முழு புலமைப்பரிசில் திட்டம் நாட்டின் கிராமிய அபிவிருத்திக்கு பெரும் பலமாக அமையும் என நாங்கள் நம்புகிறோம். மேலும், எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு இந்தக் கற்கைநெறிக்காக 50 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இக் கற்கைநெறியின் எதிர்கால டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்புகளை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் களனிப் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி மற்றும் பதில் உபவேந்தர் பேராசிரியர் எம். எம். குணதிலக்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பின் பிரதி நிறைவேற்றுப் பணிப்பாளர் விமுக்தி துஷாந்த, கற்கைநெறிக்காகத் தயாரிக்கப்பட்ட மேலதிக வாசிப்புப் புத்தகத் தொகுதியை அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் ஒசந்த தலபவிலவிடம் கையளித்தார்.
ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி பற்றிய அறிவுடன் ஆயுதம் ஏந்திய இந்தக் கள அதிகாரிகள், தமது சமூகங்களின் அபிவிருத்திக்கும் இலங்கையின் சிறந்த ஆட்சிக்கும் வலுவான பங்களிப்பை வழங்குவார்கள் என்று பல்கலைக்கழகமும் ஆஃப்ரியல் இளைஞர் வலையமைப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.