நவ சம சமாஜ கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னைநாள் கொழும்பு மாநகர சபை அங்கத்தவருமான வல்லிபுரம் திருநாவுக்கரசு கடந்த வெள்ளிக்கிழமை (31) காலமானார்.
இது குறித்து நவ சம சமாஜ கட்சியின் அமைப்புச் செயலாளர் நடராஜா ஜனகன் வெளியிட்டுள்ள ஊடக அறிககையில்,
கடந்த 48 வருட காலமாக நவ சம சமாஜ கட்சியின் வளர்ச்சிக்காகவும், உழைக்கும் மக்களுக்காகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், முழு நேரமாக உழைத்த மூத்த தலைவர் ஒருவரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.
கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்டிருந்த யுத்த முன்னெடுப்புக்களுக்கு எதிராக செயற்பாடு கலத்தில் முக்கிய பங்கை வகித்திருந்த தோழர் திருநாவுக்கரசு புலமை சார்ந்த நிலையில் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் பல நூல்களை எழுதியிருப்பதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை வெளிக்கொணரும் முகமாக தமிழ் நாள் ஏடுகளில் பல கட்டுரைகளையும், வரைந்திருந்தார்.
தமிழ் மக்களின் அரசியல் நியாயப்பாடுகளை சர்வதேச அளவில் தான் விஜயம் செய்திருந்த நாடுகளில் முன் நிறுத்தியிருந்த பெருமையும் அவருக்கு உண்டு.
அவரின் இழப்பால் ஏற்பட்டிருக்கும் சோகத்தில் நாமும் பங்கேற்பதுடன் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இறுதி அஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 06.11.2025 வியாழக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து பி.ப 3.௦௦ மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைபெறும் என்பதை தோழமையுடன் அறியத்தருகின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.