கமல் ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ம் தேதி ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ட்ரீட் கிடைக்கப் போகிறது.
கமல் ஹாசன் வரும் 7ம் தேதி தனது 71வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அந்த நாளில் என்ன அறிவிப்பு வெளியாகும் என்று கமல் ஹாசன் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறதாம். சுந்தர் சி. இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை கமல் ஹாசன் தயாரிக்கவிருக்கிறார் என்பது தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் அந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட தேதி குறித்துவிட்டார்கள்.
கமல் ஹாசனின் பிறந்தநாள் அன்று சுந்தர் சி., ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகப் போகும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடிவு செய்திருக்கிறார்களாம். அந்த படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோரும் வேலை செய்யப் போகிறார்களாம். அதாவது ரஜினிகாந்த், கமல் ஹாசனின் வாரிசுகள் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றவிருக்கிறார்களாம். ஐஸ்வர்யாவும், ஸ்ருதியும் இதற்கு முன்பே சேர்ந்து ஒரு படத்தில் வேலை செய்திருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய முதல் படமான 3-ன் நாயகி ஸ்ருதி ஹாசன் தான். இந்நிலையில் இருவரும் இணை தயாரிப்பாளர்கள் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்கள். ரஜினிகாந்த், சுந்தர் சி. மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே ஸ்பெஷல் தான். இதில் ரஜினி மகளும், கமல் மகளும் சேர்ந்து படத்தை தயாரிக்கவிருப்பது இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது. ரஜினிகாந்துக்கு நிச்சயம் ஒரு சூப்பர் கதையை தான் படமாக்குவார் சுந்தர் சி. என்று நம்பப்படுகிறது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் சேர்ந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று பேசப்பட்ட நிலையில் அவருக்கு பதில் வேறு யாரோ ஒருவர் இயக்கப் போகிறார். தனக்கு பிடித்த கமல், ரஜினிக்காக மீண்டும் ஒரு கேங்ஸ்டர் கதையை தான் தயார் செய்து வைத்தாராம் லோகேஷ். நீங்கள் ஏற்கனவே கேங்ஸ்டர் படம் எடுத்து வந்த நெகட்டிவ் விமர்சனங்களே போதும் என்று தான் லோகேஷுக்கு அந்த பட வாய்ப்பை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.