ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இன்று (நவ., 03) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீடுகளில் உறங்கி கொண்டிருந்த மக்கள், கட்டடங்கள் குலுங்கியதை கண்டு, சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து உள்ளனர். இதுவரை 60க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். பல்ஹா மாகாணத்தின் கவர்னர் செய்தி தொடர்பாளர் ஹாஜி ஜைதின் கூறியதாவது: இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், என்றார்.