வவுனியாவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி கூடவுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்பது உள்ளடங்கலாக அதனை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி ஆராயப்படவுள்ளது.
2026 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்து விசேட உரையாற்றவுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள இந்த வரவு – செலவுத் திட்டத்தில் 2026ஆம் ஆண்டுக்கான மொத்த அரசாங்க செலவினர் 4,434 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 618 பில்லியன் ரூபா நிதியும், பொதுநிர்வாக அமைச்சுக்கு 596 பில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று பாதுகாப்பு அமைச்சுக்கு 455 பில்லியன் ரூபாயும், கல்வி அமைச்சுக்கு 301 பில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதா அல்லது எதிராக வாக்களிப்பதா என்பது குறித்தும், இவ்வரவு, செலவுத்திட்டத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் கட்சியுடன் கலந்துரையாடித் தீர்மானிக்கவேண்டும் என தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழு தெரிவித்திருந்தது.
அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி வவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் கூடவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.