செவ்வந்தி விவகாரத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் பலர் கைது செய்யப்பட்டு வருகின்ற தறுவாயில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன.
செவ்வந்திக்கு உதவியதற்காக அரியாலையில் வசித்த ஆனந்தன் என்பவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆனந்தனின் மாமா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வந்தி விவகாரத்தில் யாழ்ப்பாணத்தில் இன்னும் சிலர் கைதாகும் சந்தர்ப்பம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, இந்தியாவிற்கு தப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டிலேயேஆனந்தன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஆனந்தன் கைது செய்யப்பட்ட பிறகு அவரிடம் இருந்து சில கைத் துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அது மாத்திரமன்றி, ஆனந்தன், கடலின் நீரோட்டத்தை வைத்து பிரயாணங்களை தீர்மானிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றவர் என கூறப்படுகின்றது.
ஜே.கே. பாயுடன் சேர்ந்து ஆனந்தன், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்தி வருவது போன்ற குற்றங்களை செய்துள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளன.