நாட்டில் கடந்த ஒரு வாரமாக நிலவும் மழையுடனான காலநிலை படிப்படியாக குறைவடையும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் கடந்த 17ஆம் திகதி முதல் வியாழக்கிழமை (23) வரை சீரற்ற காலநிலையால் 13 மாவட்டங்களில் 2625 குடும்பங்களைச் சேர்ந்த 10 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய குருணாகல், அநுராதபுரம், காலி, கேகாலை, பதுளை, கண்டி, புத்தளம், கொழும்பு, நுவரெலியா, வவுனியா, மொனராகலை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு அதிகளவான பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. இம்மாவட்டங்களில் 402 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும் என்பதால் கடலுக்குச் செல்லும் பல நாள் படகுகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் மணித்தியாலத்துக்கு 3 கிலோ மீற்றர் வேகத்தில் மெதுவாக வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அதே பிராந்தியத்தில் மையம் கொண்டுள்ளது.
இது, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் வழியாக வடக்கு-கிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதால், கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 55-65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும். இதன் போது பலத்த இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும். மேலும், அந்தக் கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த கடற்பகுதிகளுக்கு செல்லும் பல நாள் மீன்பிடிப்படகுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓரிரு நாட்களில் இந்த சீரற்ற காலநிலை படிப்படியாகக் குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.