வட மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும் நேர முகாமைத்துவம் பின்பற்றப்பட வேண்டும் எனவும் திணைக்களத் தலைவர்கள் அதற்கு முன்னுதாரணமாக செயற்பட வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கான கௌரவிப்புக்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், 2026ஆம் ஆண்டுக்கான திட்டங்கள் ஒரு மாத காலத்தினுள் தயார் செய்யப்பட வேண்டும். திட்டங்கள் தயாரிக்கப்படும் போது திணைக்களத் தலைவர்கள் அவற்றை நேரடியாகப் பார்வையிட்டு, அதன் தேவைப்பாடுகளை உரியவாறு மதிப்பீடு செய்ய வேண்டும். திட்டங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர் மாற்றுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
வாழ்வாதார உதவிக்கான திட்டங்கள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டிருந்தாலும் அவை அதன் நோக்கத்தை முழுமையாக எட்டவில்லை. எனவே அவ்வாறான திட்டங்கள் தயாரிக்கப்படும் போது கூடுதல் அவதானம் தேவை. குறிப்பாக மத்திய அரசாங்கத்தாலும் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் மாவட்டச் செயலர்களுடன் கலந்துரையாட வேண்டும்.
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதிக்கு மேலதிகமாக தூய்மை இலங்கை செயற்றிட்டம் உள்ளிட்ட பல்வேறு செயற்றிட்டங்கள் ஊடாக மேலதிக நிதிகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, அதற்குரிய திட்டங்களையும் திணைக்களத் தலைவர்கள் தயாரிக்க வேண்டும்.
மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிகளைப் பங்கீடு செய்யாமல் எந்தப் பிரதேசங்களுக்கு தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதிகளை ஒதுக்கீடு செய்யவேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்பட வேண்டும்.
2025ஆம் ஆண்டு திட்டங்களை முன்னெடுக்கும்போது எதிர்கொண்ட சவால்கள் தொடர்பில் குறிப்பாக சில திட்டங்களுக்கான கேள்விகோரல்களை வெளியிட்டபோது ஒப்பந்தகாரர்கள் யாரும் அதற்கு விண்ணப்பிக்காமை தொடர்பாகவும் திணைக்களத் தலைவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது. அதனை அடுத்த ஆண்டு எவ்வாறு சரி செய்வது என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டது.
தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.