வன்முறை மற்றும் மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை ஒடுக்கும் நோக்கில், அடுத்த வாரம் கனேடிய அரசாங்கம் ஒரு புதிய பிணைச்சீர்திருத்த மசோதாவை முன்வைக்கும் என்று பிரதமர் Mark Carney வியாழக்கிழமை அறிவித்தார்.
வாகனத் திருட்டுகள், வீடு புகுந்து திருடுதல், மனித கடத்தல்கள், பாலியல் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் போன்ற கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கனேடிய சமூகங்களுக்கு வெளியே வைத்திருக்கும் முயற்சியாக வரவிருக்கும் புதிய சட்டம் அமையும் என்று பிரதமர் மேலும் கூறினார்.
தற்போது, பெரும்பாலான பிணை விசாரணைகளில், தொடக்கப் புள்ளி விடுதலை செய்வதாகவே உள்ளது, மேலும் ஒருவரை ஏன் பிணையில் விடுவிக்கக்கூடாது என்பதையும் நிரூபிக்க வேண்டும், இதனால் மீண்டும் மீண்டும் வன்முறையில் ஈடுபடுபவர்கள் விரைவாக சமூகத்திற்கு திரும்புவது மிகவும் எளிதாக உள்ளது. சில சமயங்களில் அவர்கள் குற்றங்களைச் செய்த அதே சமூகங்களுக்கும் திரும்புகின்றனர். என்றும் எங்கள் புதிய சட்டம் இந்த நிலைமையை முழுமையாக புரட்டிப் போடும் என்றும் Carney கூறினார்.
இவற்றை வலுப்படுத்தும் நோக்கில் RCMP கூடுதலாக 1,000 அதிகாரிகளை பணியமர்த்துவதற்கு மத்திய அரசு மேலதிகமாக நிதியை ஒதுக்கும் என்றும் பிரதமர் அறிவித்தார். அதுமட்டுமன்றி National police படையானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் பணமோசடி வலையமைப்புகள், online மோசடிகள் மற்றும் சட்டவிரோதமாக சொத்துக்களைச் சேர்த்தல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக 150 மேலதிக RCMP பணியாளர்களை ஒதுக்குவதற்கும் அனுமதிக்கும்.