மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசினார்.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173, ஷுப்மன் கில் 20 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. 2-வது ஓவரிலேயே ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆனார். ஜெய்டன் சீல்ஸ் வீசிய பந்தை ஜெய்ஸ்வால் மிட் ஆஃப் திசையில் தட்டிவிட்டு விரைவாக ரன் எடுக்க ஓடினார். ஆனால் பந்து டேக்நரைன் சந்தர்பால் கைகளுக்கு சென்ற நிலையில் ஷுப்மன் கில் ரன் ஓட வேண்டாம் என கைகாட்டினார். ஆனால் அதற்குள் ஜெய்ஸ்வால் ஆடுகளத்தின் பாதி பகுதியை கடந்துவிட்டார்.
இதன் பின்னர் ஜெய்ஸ்வால் திரும்பி கிரீஸை நோக்கி ஓடினார். ஆனால் அதற்குள் டேக்நரைன் சந்தர்பால் பந்தை த்ரோ செய்ய அதை பிடித்து விக்கெட் கீப்பர் டெவின் இம்லாக் ஸ்டெம்பை தகர்க்க ஜெய்ஸ்வால் வேதனையுடன் பெவிலியன் திரும்பினார். 258 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 22 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் எடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லுடன் இணைந்து 74 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி மட்டையை சுழற்றினார். அதிரடியாக விளையாடிய அவர், 54 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஜோமல் வாரிக்கன் பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டுக்கு அருகே ஜெய்டன் சீல்ஸிடம் கேட்ச் ஆனது. இதன் பின்னர் களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரெலும் அதிரடியாக விளையாடினார்.
மறுபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 177 பந்துகளில், ஒரு சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் தனது 10-வது சதத்தை விளாசினார். மட்டையை சுழற்றிய துருவ் ஜூரெல் 79 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த நிலையில் ராஸ்டன் சேஸ் பந்தில் போல்டானார். அப்போது இந்திய அணி 134.2 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 518 ரன்கள் குவித்திருந்தது. அத்துடன் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அறிவித்தார்.
ஷுப்மன் கில் 196 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 129 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்களையும், ராஸ்டன் சேஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 43 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. ஜான் கேம்பல் 10, டேக்நரைன் சந்தர்பால் 34, கேப்டன் ராஸ்டன் சேஸ் 0 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார்.
சற்று தாக்குப்பிடித்து விளையாடிய அலிக் அதானஸ் 84 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் குல்தீப் யாதவ் பந்தில் மிட்விக்கெட் திசையில் நின்ற ஜடேஜாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். ஷாய் ஹோப் 31 ரன்களும், டெவின் இம்லாக் 14 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.