இமாச்சல பிரதேசத்தில் நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பயணிகள் உயிரிழந்தனர். 20 பேர் மண்ணில் புதைந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு மழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக கடந்த சில மாதங்களில் 320 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் பகுதியில் கனமழை காரணமாக நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற பேருந்து நிலச்சரிவில் சிக்கியது.
தகவல் அறிந்து போலீஸார் மற்றும் தீயணைப்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் 15 பயணிகள் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த 20 பேர் மண்ணில் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.