ஆசிய விளையாட்டுக் களத்தில் மிகச் சிறந்த நட்சத்திரங்களுக்கு அத்திவாரமாக அமைகின்ற 3ஆவது இளையோர் ஆசிய விளையாட்டு விழா எதிர்வரும் புதன்கிழமை 22ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.
இவ் விளையாட்டு விழா புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகின்ற போதிலும் கபடி போட்டியின் லீக் சுற்று இன்று ஞாயிற்றுக்கிழமை (19) ஆரம்பமானது.
ஈசா விளையாட்டுத்துறை நகர டி மண்டபத்தில் இன்று பிற்பகல் 12.45 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான (ஏ குழு) முதலாவது போட்டியில் தாய்லாந்தை எதிர்கொண்ட இலங்கை 46 – 26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முதலாவது ஆட்ட நேர பகுதியில் ஓரளவு சவால் விடுத்து விளையாடிய இலங்கை 14 – 20 என பின்னிலையில் இருந்தது.
இரண்டாவது ஆட்டநேர பகுதியில் ஆதிக்கம் செலுத்திய தாய்லாந்து அப் பகுதியை 26 – 12 என தனதாக்கிக்கொண்டு முழு ஆட்ட நேர முடிவில் 46 – 26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியீட்டியது.
இலங்கை இளையோர் பெண்களுக்கான கபடி அணியில் மட்டக்களப்பைச் செர்ந்த புஸ்பராசா திருஷனா, தெய்வேந்திரன் பிதுர்ஷா, தியாகராசா நிஷாலினி ஆகியோர் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.
இதேவேளை ஆண்களுக்கான (ஏ குழு) கபடி போட்டியில் ஈரானை இன்று இரவு 7.45 மணியளவில் இலங்கை எதிர்த்தாடவுள்ளது.