இலங்கை கடற்படை 35 தமிழக மீனவர்களை கைது செய்து, படகுகளைப் பறிமுதல் செய்தது. இதற்கு நிரந்தர தீர்வு கோரி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரின் தொடர்ச்சியான அத்துமீறல் நடவடிக்கைகள் மீண்டும் ஒருமுறை தமிழக மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்று (நவம்பர் 3) இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 35 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன், அவர்களின் நான்கு படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இந்தச் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் மீனவர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்களைக் கைது செய்வதற்கு முந்தைய நாளான நேற்றும் இலங்கை கடற்படையினரின் அராஜகம் அரங்கேறியுள்ளது. அன்றைய தினம், 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500-க்கும் அதிகமான இராமேஸ்வரம் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை துப்பாக்கி முனையில் விரட்டியடித்துள்ளனர்.
மீன்பிடிக்க முடியாமல் கரைக்குத் திரும்பிய மீனவர்கள், இந்தப் பிரச்சினை காரணமாக ஒவ்வொரு படகுக்கும் ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கவலையுடன் தெரிவித்தனர். மேலும், இலங்கை கடற்படையினர் மீனவர்களைத் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி, அவர்களின் அத்துமீறல் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காட்டுவதாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும், அவர்களின் படகுகள் சேதப்படுத்தப்பட்டுப் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் நிகழ்வாகி வரும் நிலையில், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு அவசியம் என அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வரிசையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து அழுத்தமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். “கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அதே அக்கறையோடு எங்கள் மீனவர்கள் மீதும் கவனம் செலுத்தி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.