அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அத்தோடு தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (17) ‘6ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாடு மற்றும் ஆசிய தேயிலை கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றல்’ தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது. இதன் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்வரும் 27ஆம் திகதி கொழும்பில் முதன் முறையாக இலங்கை தலைமை வகிக்கும் 6ஆவது ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாடு இடம்பெறவுள்ளது. 6 நாடுகளைச் சேர்ந்த 25 வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். முதன்முறையாக இந்த மாநாட்டுக்கான தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்துள்ளமையை வெற்றியாகக் கருதுகின்றோம்.
நாட்டின் தேயிலை உற்பத்தியில் 75 சதவீத பங்களிப்பினை சிறு தேயிலை தோட்டங்களே வழங்குகின்றன. இந்நிலையில் முதன் முறையாக தேயிலை உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2030இல் 400 மில்லியன் கிலோ கிராம் தேயிலை உற்பத்தி நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 300 மில்லியன் கிலோ கிராம் சிறு தேயிலை தோட்டங்களுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
அந்த இலக்கை அடைவதில் பல சவால்கள் காணப்படுகின்றன. அவ்வாறு எதிர்கொள்ள நேரிடும் சவால்களுக்கான மாற்று தீர்வுகள் குறித்து 3 பிரதான தலைப்புக்களின் கீழ் இந்த மாநாட்டில் முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளோம். இறுதியாக 2013இல் அதிகூடிய தேயிலை உற்பத்தியாக 340 மில்லியன் கிலோ கிராமாக பதிவாகியுள்ளது. இது 2024இல் 262 மில்லியன் கிலோ கிராமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு ஒக்டோபர் வரை 220 மில்லியன் கிலோ கிராம் உற்பத்தி பதிவாகியுள்ளது.
எனவே இதனை 400 மில்லியன் கிலோ கிராம் வரை கொண்டு செல்வது இலகுவான விடயமல்ல. 2024இல் தேயிலை ஏற்றுமதி வருமானம் 1.45 பில்லியன் டொலர்களாகும். 2030இல் இதனை 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய இந்த இலக்குகளை வெற்றிகரமாக அடைவதற்கு ஆசிய தேயிலை கூட்டமைப்பு உச்சி மாநாட்டுக்காக கிடைக்கப் பெற்றுள்ள தலைமைத்துவத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வோம் என்றார்.