2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. இதன்படி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடர் முதல், பெண்கள் பிரிவில் திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்க முழுமையான தடை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில், ஆணாகப் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உடல் வலிமை மற்றும் ஆற்றல், அவர்கள் பாலின மாற்று ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் நீடிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. “பெண்கள் பிரிவைப் பாதுகாக்க வேண்டும்” என்ற தனது பிரசார வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஒலிம்பிக் கமிட்டியின் புதிய தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்.
இந்த புதிய தடை அனைத்து ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் பொருந்தும். இந்தத் தடை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இது முழுமையாக அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு, விளையாட்டு உலகில் பெரும் விவாதங்களையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.