வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு மாற்றவோ அல்லது பகிரவோ முடியாது என நோர்வே நோபல் நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவர்து மனைவியையும் அமெரிக்கப் படைகள் அண்மையில் கைது செய்தன.
இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தனக்குக் கிடைத்த நோபல் பரிசை ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு வழங்க விரும்புவதாக மரியா கொரினா மச்சாடோ ஒரு நேர்காணலில் சூட்சுமமாக தெரிவித்தார். இது உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக நோர்வே நோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒருமுறை அறிவிக்கப்பட்ட நோபல் பரிசை மற்றொருவருக்கு மாற்றவோ, பகிர்ந்துகொள்ளவோ அல்லது இரத்து செய்யவோ சட்டப்படி இடமில்லை.
நோபல் அறக்கட்டளையின் விதிகளின்படி, விருது குறித்த தீர்மானம் இறுதியானது மற்றும் நிலையானது. இதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.
விருது பெற்றவர்கள் அதன் பின்னர் செய்யும் செயல்கள் அல்லது அவர்கள் வெளியிடும் கருத்துகள் குறித்து நோபல் குழு எந்தவித விமர்சனமும் செய்யாது.
மச்சாடோவிடமிருந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பரிசைப் பெறுவது தனக்குப் பெருமை அளிக்கும் எனத் தெரிவித்திருந்தார். அடுத்த வாரம் வொஷிங்டனில் இவர்கள் இருவரும் சந்திக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், நோபல் நிறுவனத்தின் இந்தத் தெளிவுபடுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது.
வெனிசுவேலாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கப் போராடியதற்காக மச்சாடோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், நோபல் குழுவின் விதிகளின்படி அந்த கௌரவம் அவருக்கு மட்டுமே உரியது என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.